×

சேலத்துக்காரர் பக்கம் தாவ தயாராகிக் கொண்டிருக்கும் குக்கர் கட்சி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரர் அணியில் விரைவில் ஐக்கியமாக போகிறார்களாமே டெல்டா மாவட்ட குக்கர் கட்சி நிர்வாகிகள்’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் சேலத்துக்காரர், தேனிக்காரர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் சேலத்துக்காரர் அணி கை ஓங்கியிருப்பதால் குக்கர் கட்சி ஆதரவாளர்களை கூண்டோடு காலி செய்து தனது பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளார். அதற்கான மாஸ்டர் பிளான் போட்டு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் சேலத்துக்காரர் கொடுத்ததோடு அதற்கான வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் முதல் கட்டமாக டெல்டா மாவட்டத்தை குறி வைத்து நெற்களஞ்சியம், மலைக்கோட்டை மாவட்டங்களில் இருந்து குக்கர் கட்சி முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேருக்கு ‘வைட்டமின் ப’ கொடுத்து சேலத்துக்காரர் டீம் அலக்காக தூக்கினர். டெல்டா மாவட்டத்தில் குக்கர் முக்கிய நிர்வாகிகளை தூக்கும் படலம் தொடர்ந்து நடக்கிறது.

‘வைட்டமின் ப’ எவ்வளவு வேண்டும் என அதற்கான டீலிங்கை சேலத்துக்காரர் டீம் கச்சிதமாக பேசி முடித்து விட்டனர். டெல்டா மாவட்டத்தில் இருந்து குக்கர் கட்சி முக்கிய நிர்வாகிகள் அதில் இருந்து விலகி விரைவில் சேலத்துக்காரரிடம் ஐக்கியமாக உள்ளார்கள். டீலிங் பேசியபடி அவர்களுக்கு ‘வைட்டமின் ப’’ சேலத்துக்காரர் கையால் வழங்கப்பட உள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காவல் நிலையத்தின் பெயரில் பலே கலெக்‌ஷன் நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் வனம் என்று முடியும் காவல் நிலையத்தில் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் என்ற பெயரில் வணிகர்களிடம் பல லட்சத்தை காக்கி அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டார்களாம். பழமையான காவல் நிலையம் சமீபத்தில்தான் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறதாம்.

இதற்கிடையே காவல்நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெறுவதற்காக இதற்கு முன்பு இருந்த இன்ஸ், எஸ்ஐ ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள வணிகர்களிடம் பல லகரம் வரை கரன்சியை கறந்துவிட்டார்களாம். காவல்நிலையத்தை சீரமைக்க வேண்டும், பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தியவர்கள் பணத்தோடு டிரான்ஸ்பரில் சென்று விட்டார்களாம். ஆனால் காவல் நிலையத்தில் சாதாரண கேட் கூட போடவில்லையாம். ஆய்வுக்கு வந்த ஐஎஸ்ஓ தரச் சான்று அதிகாரிகள் குழுவினரும் பல குறைகளை சுட்டிக்காட்டி விட்டு சென்றார்களாம். ஆனால் அவர்களையும் மடக்கி போட்டு சில லகரத்தை கொடுத்து ஐஎஸ்ஓ தர சான்றிதழை காக்கி அதிகாரிகள் பெற்று விட்டார்களாம். இருந்தாலும் காவல்நிலையத்துக்கு சென்ற வணிகர்களோ கொடுத்த காசுக்கு 2 சதவீதம் கூட வேலை செய்யவில்லையே, பல லகரத்தை பெற்ற காக்கித் துறை அதிகாரிகள் ஆட்டையை போட்டு விட்டதாக புலம்பி வருகிறார்களாம்.

இதனால் கரன்சி பிரச்னை வனம் என்று முடியும் காவல் நிலையத்தில் பூதாகரமாக வெடித்துள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வீரமான மாஜி மினிஸ்டர் ஒத்தகால்ல நிக்குறாராமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல்ல கூட்டணி யார்கூட வைக்கலாம்னு இப்போதே சேலத்துக்காரரு கணக்கு போட்டு வர்றாராம். இந்த கணக்குல எல்லாம் கழண்டுக்கும் போல இருக்குதாம். இதனால கூட்டணி கட்சிகளை தக்க வைக்க முடியாம திணறி வர்றாராம். ஏற்கனவே சேலத்துக்காரருக்கும் மலையானவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்குற நிலையில, நாங்க பாஸ்கிட்டதான் பேசுவோம்னு, பாஸ்ஐ பார்க்க தனது டீமோட, டெல்லிக்கு போயிருக்காரு. அப்போது, அவருக்கு முன்னாடி, மலையானவர், பாஸ்கூட இருந்திருக்காரு. எல்லாத்தையும் மென்னு முழுகி, இப்ப அவருக்கும் எனக்கும் ஒண்ணும் பிரச்னையேயில்லைனு கூவியிருக்குறாரு சேலத்துக்காரரு.

இந்த நிலையில தாமரை கட்சியோட தொகுதி பட்டியல்ல இருக்கிற வெயிலூர் நாடாளுமன்ற தொகுதியை தாமரைக்கு கொடுக்கக்கூடாது. நம்ம கட்சியில இருக்கிற ஒருத்தருக்குத்தான் கொடுக்கணும். அவரு பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவரா இருக்கணும்னு சேலத்துக்காரர் கிட்ட, மிஸ்டர் பத்தூர் மாவட்ட மாஜி மினிஸ்டர் வீரமானவர் அழுத்தம் கொடுக்குறாராம். இதுல ஏற்கனவே 2 முறை நின்னு தோல்வியை சந்திச்சவரை மீண்டும் நிற்க வைக்கக்கூடாதுன்னு ஒத்தக்கால்ல நிக்கிறாராம். வீரமானவரின் இந்த நடவடிக்கையால மீண்டும் கூட்டணிக்குள்ள குழப்பம் வந்துடுமோன்னு சேலத்துக்காரர் பயப்படுறாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரெண்டு அதிகாரிகளின் ஆட்டம் பற்றி ஏகப்பட்ட புகார் வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஏற்காடு அடிவாரத்தில் இருக்கும் வனத்துறை உயிரியல் பூங்காவில், வனவர் ரேங்கில் இரண்டு அதிகாரிகள் இருக்காங்களாம். நான்கு ஆண்டுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அவர்கள், எல்லாமே நாங்க தான்னு ஆட்டம் போட்டு வாராங்களாம். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பதில் இருந்து, அனைத்திலும் தங்களது கைவரிசையை காட்டி கல்லா கட்றாங்களாம். சமீபத்தில ஆய்வுக்கு போன அதிகாரி, அதை கண்டுபிடித்து செமையா டோஸ் விட்டிருக்காரு. ஆனாலும் அந்த இரண்டு பேரும், எங்களை ஒன்னும் செய்ய முடியாதுனு துள்ளிக்கிட்டு இருக்காங்களாம். அதில ஒரு அதிகாரி மீது கடந்த வாரம் அந்த பூங்காவில் வேலை பார்க்கும் 2 பெண்கள், தங்களிடம் கொச்சையாக பேசி சீண்டுவதாக புகார் வேற கொடுத்திருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலத்துக்காரர் பக்கம் தாவ தயாராகிக் கொண்டிருக்கும் குக்கர் கட்சி நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salatukkar ,Delta District Cooker Party ,Saletukgara ,Peter Mama ,Saletukkara ,Lighthaksha ,Saletaka ,
× RELATED உளவுத்துறையின் ரிப்போர்ட்டால்...